பாட்னா: பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (நவ10) எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இந்நிலையில் 6 மணிக்குள் ஒரு கோடி வாக்குப்பெட்டிகள் எண்ணி முடிக்கப்பட்டன.
மூன்று கோடி வாக்குப்பெட்டிகள் எண்ணும் பணிகள் நிறைவடையவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஐக்கிய ஜனதா தளத்தை பின்னுக்கு தள்ளி 72 இடங்களுடன் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் 42 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் பிகாரில் நிலவும் தேர்தல் நிலவரம் குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும், பிகாரில் அரசை நிறுவுவோம்.
மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக விளங்குகிறது. இந்தத் தேர்தலை நிதிஷ் குமாரை முன்னிறுத்தியே சந்தித்தோம். அனைத்து சூழ்நிலையையும் நிதிஷ் குமார் மாற்றியுள்ளார். அவரது அரசாங்கம் மக்களுக்கானது. அவர் மக்களுக்கான ஆட்சி கொடுத்தார். அவரை மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் முடிவுகள் அதையை காட்டுகின்றன” என்றார்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்தும் முயற்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது.
தற்போதைய நிலவரப்படி, மகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 76 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி தேர்தல்”- நிதிஷ் குமாரின் பேச்சுக்கு பாஜகவின் அழுத்தம் காரணமா?