இடுக்கி (கேரளா): முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி அலினா வர்கீஸ் நிதியளித்துள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளி மாணவி ஒருவருக்குத் தேர்வெழுத உதவியதற்காக, மாணவி அலினாவிற்கு கள்ளர் அரசுப் பள்ளியின் முதல்வர் இந்த பரிசுத் தொகையை கொடுத்துள்ளார்.
உடனடியாக, பாம்பாடும்பாறா பஞ்சாயத்து உறுப்பினர் சிவி ஆனந்திடம் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்குக் கொடுப்பதாக மாணவி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி அலினாவிற்கு கேரள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளவாசிகள் மாணவியின் செயலுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், 18 வயதுக்கு மேல் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவச கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் ஆன நிதியுதவியைத் தரும்படியும் கேட்டிருந்தார்.
இச்சூழலில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெரும்பாலானோர் நிதியளித்து வருகின்றனர். இந்த வேளையில், மாணவி நிதியளித்ததைத் தொடர்ந்து சமூக வலைதளவாசிகள் தாங்களும் நிவாரண நிதி வழங்கவுள்ளதாகத் தெரிவித்துவருகின்றனர்.