நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் வார ஊரடங்கு விதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கை விதிக்க வேண்டாம் எனவே விரும்பினேன். ஆனால், கரோனா எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், சுகாதார வசதிகள் போதாமல்போவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுகிறது. இரவு 8 மணிமுதல் காலை 7 மணிவரை ஹாப்பிங் மால்கள் மூடப்படுகின்றன. கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை எனில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஊரடங்கு விதிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை மாவட்ட ஆட்சியர்களே எடுப்பார்கள். மாநிலம் தழுவிய ஊரடங்கு விதிக்கப்படும்பட்சத்தில் மக்களுக்கு அது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 36 ஆயிரத்து 902 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.