பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தொடர்புடைய 60 இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் நள்ளிரவு முதல் சோதனை செய்து வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு நிதி திரட்டி வருவதாகவும், பயிற்சி முகாம் நடத்தி மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயலுக்கு உட்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, அதில் தொடர்புடைய நான்கு பேரை என்ஐஏ அலுவலர்கள் கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோதனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முக்கியமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் பியாஸ் அகமது, பாப்புலர் பிரண்ட் ஆப் அமைப்பின் மதுரை மாவட்டச் செயலாளர் யாசர் அராபாத் உட்பட 50 நிர்வாகிகளை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெறுவதால், பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட்கள் தங்களின் தளங்களை அஸ்ஸாம் மாநிலப்பகுதிகளுக்கு மாற்றமுயற்சி - என்ஐஏ