டெல்லி: இந்தியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டுவது, இளைஞர்கள் மற்றும் புது நபர்களை சேர்ப்பது போன்ற தேசத் தூரோக செயல்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்துள்ளன.
காஷ்மீர், மங்களூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக சுமார் 12 பேர் சந்தேக வளையத்தில் உள்ளதாகவும், இவர்கள் என்ஐஏவின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு பெண்கள்
இதேபோன்று, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மேற்குறிப்பிட்ட மூன்று நகரங்களின் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ கடுமையான சோதனையை மேற்கொண்டு, தேச துரோக செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி ஏழு பேரை கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில், மிஷா சித்திக், செஃபா ஹரிஸ் என்ற இரண்டு பெண்களும், ஐந்து ஆண்களும் அடங்குவர். டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஹூப் போன்ற சமூக வலைதளங்களில் தேசத் துரோக கருத்துகளையும், ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளையும் பரப்பியதை அடுத்து, ஏழு பேரும் கைதுசெய்யப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
மங்களூரில் பெண் கைது
இதுகுறித்து நம்மிடம் பேசிய அலுவலர், " இதுபோன்ற செயல்பாடுகளில் பெண்களும் ஈடுபட்டிருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ஐஎஸ் அமைப்பு ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இணைந்துள்ளனர்.
இவர்கள் ஐஎஸ் அமைப்பின் கருத்துகளை பரப்பி, இளைஞர்களை மூளைச்சலவை செய்கின்றர். அதுமட்டுமில்லாமல், நிதி திரட்டி, அமைப்பிற்கு ஆட்களை சேர்க்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர்" என தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று முன்தினம் (ஜனவரி 3) என்ஐஏ, கர்நாடக காவல்துறை இணைந்து மங்களூருவில் ஐஎஸ் அமைப்பின் செயல்பாட்டாளராக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை கைதுசெய்தனர். அப்பெண் தீப்தி மார்லா (எ) மர்யம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்தோ-பசுபிக்: ஜெய்சங்கர், பிளிங்டன் தொலைபேசி உரையாடல்