மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்ததாக தாதா சோட்டா சகீலின் நெருங்கிய கூட்டாளியான சலீம் ஃப்ரூட்டை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் நேற்று (ஆக 4) கைது செய்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை தரப்பில், "தாதா தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.
அந்த வகையில், ஆள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, பணமோசடி, கள்ளநோட்டு புழக்கம், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மே 12 ஆம் தேதி 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சோட்டா சகீலின் நெருங்கிய கூட்டாளியான சலீம் ஃப்ரூட் மும்பையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து சலீம் ஃப்ரூட்டை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நிதி ஆயோகின் 7ஆவது கூட்டம்