தென்மாநிலங்களில் புதுச்சேரியில் மட்டுமே புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதித்திருந்தது. ஒமைக்ரான் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளதால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், நேற்றிரவு (டிசம்பர் 31) 10 மணிமுதல் இன்று நள்ளிரவு ஒரு மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனத் தடைவிதித்தும், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடுப்பூசி செலுத்திய சான்றிதழைச் சரிபார்க்க வேண்டும் எனக்கூறி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியளித்துள்ளனர்.
கட்டுப்பாடு நெறிமுறையோடு கொண்டாட்டம்
டிசம்பர் 15ஆம் தேதிக்கு மேல் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. புதுச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதிகள் வரை அனைத்திலும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே, வந்த சுற்றுலாப் பயணிகளிடம் தடுப்பூசி சான்றிதழ் எப்படிச் சரிபார்க்கப்படும்? என்ற கேள்வி எழுந்தது. மாவட்ட நிர்வாகம் அறைகளில் தங்கியுள்ளவர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகக் கடற்கரைச் சாலை, ஓட்டல்கள், விடுதிகளில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. இதில், அதிகளவு முதலீட்டைத் தொழிலதிபர்கள் செய்திருந்தனர். இதனால் உயர் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக இருக்காதோ? என்ற கவலை நிலவியது. புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டதால் அவர்கள் நிம்மதியடைந்தனர்.
தடுப்பூசி கட்டாயம்
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்த புதுச்சேரியின் பிரதான எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, காலாப்பட்டு, முள்ளோடை பகுதிகளின் வழியாகப் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, காவல் துறையினர் தடுப்பூசி சான்றிதழைச் சரிபார்க்கின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகரப் பகுதிகளில் இன்று வலம்வந்த சுற்றுலாப் பயணிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தியவர்களிடம் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
விழா நடத்துவோரும் கரோனா விதிமுறைகளை நிகழ்ச்சி நடத்தும் இடங்களில் கண்டிப்பாகப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று புத்தாண்டு 2022 கொண்டாடப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: NEET Coaching Centerஇல் படித்த 34 பேருக்குக் கரோனா