புதுச்சேரியில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமாக நடைபெறும் கடற்கரை சாலையில் நடத்தாமல் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்த் துறை தலைவருடன் ஆலோசித்து பின்னர் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கரோனா நிலவரம் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தினமும் சுகாதார துறை அலுவலர்களுடன் காணொலியில் கலந்துரையாடி வருகிறார். நேற்று அவரது ஆலோசனையின் போது, "புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் கரோனா தடுப்பூசிகளின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தத் தயாராகுமாறு" அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரையில் மக்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம். ஆனால், தற்போது கரோனா வைரஸ் பரவிவருவதால், அதனை இம்முறை அனுமதிக்க முடியாது. அதிக அளவில் மக்கள் மகிழ்ச்சியில் கூடும் வேளையில் மத்திய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது கடினம்.
இதனால் கடற்கரை சாலைக்குப் பதிலாக புத்தாண்டு கொண்டாட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை!