இம்பால் (மணிப்பூர்): மணிப்பூர் மாநிலம் கங்போக்பி மாவட்டத்தில், இன்று (செப் 12) மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் கலவரம் வெடித்து வருகிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த கலவரச் சம்பவங்களில் சிக்கி 160க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு தேடி நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். ஏறத்தாழ 3 மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றன.
கடந்த மே மாதம் பழங்குடியினப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், காங்குயி கிராமத்தின் ஐரேங் மற்றும் கரம் வைபேயி பகுதியில் நிகழ்ந்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு, காங்போக்பியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பழங்குடியின மக்கள் ஒற்றுமைக் குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமைக் குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, “மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண நிலையை மாற்றி அங்கு அமைதி நிலவும் வகையில் பல்வேறு வகையான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட மலைக்கிராமங்கள் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரம்) சட்டம் 1958 பிரிவின் கீழ், சிறப்புப் படைகள் பாதுகாப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டு உள்ளது” என உள்ளது.
தென்ங்நவ்பால் மாவட்டத்தின் பாலேல் பகுதியில் செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 3 பேர் கொல்லப்பட்டு இருந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.