டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சிறப்பு கூட்டத் தொடருக்காகவே சீருடை மாற்றப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் நேற்று (செப்.18) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதற்காக தமிழ்நாட்டிலிருந்து அனைத்து எம்பிக்களும் டெல்லி சென்றுள்ளனர். இந்த சிறப்புக் கூட்டத்தொடரில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்த மசோதா விவாதத்துக்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடந்த முதல் நாள் கூட்டத்தொடரில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் தன் கடைசி உரையை ஆற்றினார். கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தொடங்கியது. இன்று முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம், வெற்றி மற்றும் சாதனைகள் குறித்து நினைவு கூர்ந்து விவாதிக்கப்பட்டது. பிரிவு 370 ரத்து, ஜிஎஸ்டி, ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் உள்ளிட்டவை நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிட்டு பிரதமர் பேசினார். மேலும், தனது உரையில் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அதன்படி ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கபட்டுள்ளன. இதற்கு முன்னதாக ஆண் பணியாளர்களுக்கு சபாரி சூட் போன்ற உடை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு லேசான காவி நிறத்திலான சட்டையும், அதற்கு மேல் அணியக்கூடிய கோர்ட்டும், காக்கி நிறத்தினாலான கால் சட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்கள் அணியக் கூடிய சீருடையில் சிறிய அளவிலான தாமரை பூக்கள் இடம் பெற்றுள்ளது.
புதிய சீருடைகள் அறை உதவியாளர்கள் மற்றும் சொற்பொழிவு அறிக்கை சேவைக்காக பயன்படுத்தப்பட்டவர்கள் உட்பட 271 ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சிறப்பு கூட்டத்துக்காகவே புதிய சீருடை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வேறு காரணங்கள் ஏதும் இல்லை எனவும் கூறப்படுகிறது.