ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்(கேசிஆர்) தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகத்தை, இன்று (ஏப்ரல் 30) அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். மிகவும் பிரமாண்டமான மாளிகை போன்று காட்சி அளிக்கும் இந்த புதிய தலைமைச் செயலகத்தை திறப்பதற்காக காலை 6 மணிக்கு தொடங்கிய சுதர்சன யாகம், பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைந்தது.
இதனையடுத்து, புதிய தலைமைச் செயலகத்தின் 6-வது மாடியில் உள்ள முதலமைச்சர் அறைக்கு கேசிஆர் சென்றார். 28 ஏக்கர் நிலத்தில் 10 லட்சத்து 51 ஆயிரத்து 676 சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய தலைமைச் செயலகம், 265 அடி உயரம் கொண்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்காக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று முதலமைச்சர் கேசிஆர் அடிக்கல் நாட்டினார்.
ஆனால், கரோனா பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள், நீதிமன்ற வழக்குகள் உள்படப் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு ஜனவரியில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. மேலும், 265 அடியில் கட்டப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகம், நாட்டிலேயே உயரமான தலைமைச் செயலகம் என அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இதன் கட்டுமானம், சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறை, இந்திய பசுமை கட்டட கவுன்சில், தெலங்கானா மாநில தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தெலங்கானா மாநில காவல் துறை ஆகியவற்றின் வழிகாட்டுதல்களோடு கட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர்களின் அலுவலகம் ஒரு இடத்திலும், அவர்களின் துறை சார்ந்த அதிகாரிகளின் இருப்பிடம் வேறொரு இடத்திலும் இருந்து வந்தது. ஆனால், தற்போது கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த பணிகளை ஒரே இடத்தில் விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சந்திரசேகர ராவ், “தெலங்கானாவின் மறுசீரமைப்பை பற்றி சில முட்டாள்கள் பேசினர். மறுகட்டமைப்பின் ஆதாரங்கள் உடன், மாநிலம் வளர்ச்சியை நோக்கி உள்ளதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய சொந்தக்கரங்களால் எழுப்பப்பட்ட புதிய தலைமைச் செயலகம் சிறந்த உணர்வை அளிக்கிறது.
இந்த நேரத்தில், மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காந்திய வழியில் போராடி தனி மாநிலத்தைப் பெற்றோம். மாநிலத்திற்காக பலரும் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்திருக்கின்றனர். அம்பேத்கரின் சட்ட விதி 3, மாநிலத்தை உயர்த்தி உள்ளது.
அம்பேத்கர் பெயருக்கு பின்னால் தலைமைச் செயலகம் வருவது மகிழ்ச்சி. அம்பேத்கர் காட்டிய பாதையில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவருடைய உழைப்பும் இந்த கட்டுமானத்தில் அடங்கி உள்ளது. தெலங்கானாவின் கிராமங்களும் இதில் அடங்கும். நாம் பொறியியல் அதிசயங்களை பல கட்டுமானங்கள் மூலம் நிகழ்த்தி வருகிறோம்.
கட்டுமான டிசைனர்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வியர்வை சிந்தி உழைத்த ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் எனது நன்றிகள். தனித்துவம் வாய்ந்த தலைமைச் செயலகத்தை திறந்து வைத்ததை, நான் எனது வாழ்நாளில் கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
அம்பேத்கரின் கருத்துகள் மற்றும் காந்திய வழியில் தெலங்கானா அதன் பயணத்தைத் தொடரும்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் கேசிஆர் புதிய தலைமைச் செயலகத்தில் வைத்து, ‘ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஒழுங்கு முறைகள்’ குறித்தான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டார்.
இதையும் படிங்க: ''இது ஒரு புரட்சி; சிலை மட்டும் அல்ல'' - அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்து கேசிஆர் பேச்சு