டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா டெல்லியில் இன்று (மே 28) கோலாகலமாக நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக விழா நடைபெற்ற நிலையில், புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், நீதிபதிகள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் மேற்பார்வையால் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி இரண்டரை ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் இங்கே தங்கியிருந்தனர். சில சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்த தொழிலாளர்களுக்கு நன்றி.
நாடாளுமன்றத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மக்கள் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் தலைவர்கள் இடையே பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வலுப்பெற்றும் உள்ளது. உலகளவில் ஜனநாயகத்தின் பிறப்பிடமாக இந்தியா பார்க்கப்படுகிறது. நமது வெளிப்படைத்தன்மை மற்றும் சீரிய பணிகள் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
ஜனநாயகம் என்பது நம் நாட்டின் மதிப்புமிக்க மரபுகளில் ஒன்று. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் சக்தியாக பார்க்கப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம். எம்பிக்கள் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் வளர்ச்சிக்காகவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அதிநவீன கட்டமைப்புடன் பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை அர்ப்பணித்துள்ளார். இதைப் பார்க்கும் போது, புகழ் பெற்ற கடந்த காலமும், தற்போதைய துடிப்பான ஜனநாயகமும் நினைவுக்கு வருகிறது. எதிர்காலத்தில் புதிய உச்சத்தை அடைய இது நம்மை ஊக்குவிக்கிறது. புதிய கட்டடத்தில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடம் அனைத்து மாநிலங்களின் மரபுகளின் சமமான பிரதிநிதித்துவத்தின் சின்னமாகும். புதிய கலாச்சார கட்டடத்தை கட்டும் போது சின்னங்கள் மற்றும் கலாச்சார மரபுகள் இணைக்கப்பட்டுள்ளன. இது அனைத்து மாநில மக்களின் சம பங்களிப்பை குறிக்கிறது. இது வேற்றுமைக்கு இடையே உள்ள ஒற்றுமையை காட்டுகிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடம் வளர்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் ஆகிய அனைத்து அம்சங்களிலும் இந்தியாவை உலகிலேயே சிறந்த நாடாக மாற்ற, அனைவரும் ஒன்றிணைந்து செயல்படத் தூண்டும்" என கூறினார்.
இதையும் படிங்க: "புதிய நாடாளுமன்ற கட்டிடம் காலத்தின் தேவை" - பிரதமர் மோடி உரை!