டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரூ.75 நாணயம் மற்றும் நினைவு தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ரூ.75 நாணயத்தின் மையத்தில் அசோக சின்னமும், அதில் 'சத்யமேவ் ஜெயதே' (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. நாணயத்தின் நடுவில் 'பாரத்' என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும், 'இந்தியா' என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு உள்ளது. அசோக சின்னத்தின் கீழே, சர்வதேச எண்களில் ரூபாய் சின்னம் மற்றும் மதிப்பு "75" ஆகியவற்றை இடம்பெற்று உள்ளது.
நாணயத்தின் பின்புறம், நாடாளுமன்ற வளாகத்தின் படம் இடம்பெற்று உள்ளது. அதன் மேற்பகுதியில், தேவநாகரி எழுத்தில் 'சன்சாத் சங்குல்' என்றும், நாணயத்தின் கீழ் சுற்றளவில் "PARLIAMENT COMPLEX" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்தின் படத்திற்கு கீழே, "2023" ஆண்டு என்று, சர்வதேச எண் வரிசையில் எழுதப்பட்டு உள்ளது.
35 கிராம் எடை கொண்ட இந்த நாணயம், 44 மில்லி மீட்டர் விட்டமும், 200 தொடர்களும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த உலோக நாணயம், 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், தலா 5 சதவீதம் நிக்கல் மற்றும் துத்தநாகம் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
புதிய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காக பின்புறத்தில் கருப்பு நிறம் கொடுத்து உள்ளனர். இந்த நிக்கல், துத்தநாகம் உள்ளிட்ட உலோக கலப்பு காரணமாக ஏற்பட்ட ரசாயன மாற்றத்தால் நாணயத்தில் கருப்பு நிறம் உருவானதாக கூறப்படுகிறது.
ஆனால் பொதுவாக கருப்பு நிறம் வந்ததும் இதை பாலிஸ் செய்து வெள்ளை ஆக்குவார்கள். ஆனால் இங்கே அப்படியே கருப்பு நிறத்தில் வெளியிட்டு உள்ளனர். சிறப்பு நாணயம் என்பதால் வேறுபடுத்தி கட்டுவதற்காக இதை கருப்பு நிறத்தில் வெளியிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், எம்.பி.க்களுக்கான ஓய்வறை, நூலகம், பல குழு அறைகள், சாப்பாட்டுப் பகுதிகள் மற்றும் ஏராளமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் உள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ள கார்பெட்கள், உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூரில் இருந்தும், மூங்கில் தரை விரிப்புகள் திரிபுராவில் இருந்தும், கல் வேலைப்பாடுகள் ராஜஸ்தானிலிருந்தும் பெறப்பட்டு உள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக, இது அமைந்து உள்ளது.
புதிய கட்டடத்தின் உட்புறம், தாமரை, மயில், ஆலமரம் உள்ளிட்டவைகளை கருப்பொருளாக கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. 64 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில், 4 மாடி கட்டடமாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், இந்த நிகழ்வை புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Sengol: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல்.. வரலாறும், சர்ச்சையும்!