கோவிட்-19 பெருந்தொற்று ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை 11 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தொற்று அதிகம் பரவும் ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளன. அத்துடன் பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
மிரட்டும் புதுவகை கரோனா
இந்நிலையில், புதுவகை கோவிட்-19 வைரஸ் COVID-19 variant- B.1.1.529 உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த புதுவகை கரோனா வைரசில் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்பைக் புரதம் (Spike Proteins) 30க்கும் மேல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
இதுவரை உருமாறிய கரோனா வகைகளில் அதிக வீரியம் கொண்டது இந்த COVID-19 variant- B.1.1.529தான் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த தொற்று டெல்டா வகை தொற்றைவிட தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பதால் உலக நாடுகள் உஷார் நிலையில் உள்ளன.
இந்தியாவிலும் உஷார் நிலை
இந்த புதுவகை தொற்று ஆப்ரிக்க நாடுகளில் முதலில் கண்டறியப்பட்டுள்ளன. போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான ஹாங்காங்கிலும் இந்த தொற்று பரவியுள்ளது.
இதன் காரணமாக பிரிட்டன் அரசு தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட சில ஆப்ரிக்க நாடுகளுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும் இந்த தொற்றின் தன்மை குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த புதுவகை தொற்று அதீத தீவிரத்தன்மை கொண்டுள்ளதால், சர்வதேச விமானப் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷண் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: Europe coronavirus: ஐரோப்பாவை மீண்டும் மிரட்டும் கரோனா - இரு நாடுகளில் லாக்டவுன்