இந்திய தேசிய ராணுவத்தின் தந்தை சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாள், ஜனவரி 23ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையே, அவரின் புகழை போற்றும் விதமாக குடியரசு தலைவர் மாளிகையில் நேதாஜியின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், குடியரசு தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பவர் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடத்த பிரசென்ஜித் சாட்டர்ஜி என சமூகவலைதளத்தில் தகவல் பரப்பப்பட்டுவந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக, நேதாஜியின் குடும்பத்தார் அளித்த புகைப்படத்தை வைத்து புகழ்பெற்ற ஓவியரான பத்ம ஸ்ரீ பரேஷ் மைட்டி வரைந்த புகைப்படமே குடியரசு தலைவர் மாளிகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது. இது தேவையற்ற சர்ச்சை எனவும் பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ட்விட்டர் பக்கத்தில், "ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசு தலைவர் 5 லட்சம் ரூபாய் வழங்கியதை தொடர்ந்து, பிரசென்ஜித் சாட்டர்ஜியின் புகைப்படத்தை திறந்து வைத்து நேதாஜியை கவுரவித்துள்ளார். கடவுள்தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் (ஏனெனில், அரசால் காப்பாற்ற முடியாது)" எனப் பதிவிட்டிருந்தார். ஆனால், தற்போது அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார்.