கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், இரண்டாவது அலை தொடங்கிவிட்டதா என அச்சம் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மார்ச் 17) நடைபெற்றது. அதில், மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மோடி, கரோனா இரண்டாவது அலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர்களை கேட்டு கொண்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகளில் சோதனையை அதிகப்படுத்துவது, முகக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்குவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனா இரண்டாவது அலையை தடுப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
![பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11045896_1036_11045896_1615982822294.png)
இப்போது, இதனை தடுக்கவில்லை எனில், நாடு முழுவதும் கரோனா பரவிவிடும். பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நான் பெற்ற தன்னம்பிக்கை அதீத நம்பிக்கையாக மாறிவிடக்கூடாது. கவனக்குறைவிற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. ஆர்டி-பிசிஆர் சோதனையையே 70 விழுக்காடு மேற்கொள்ள வேண்டும். ரேபிட் ஆன்டிஜென் சோதனையை நம்பி மாநிலங்கள் இருக்க வேண்டாம்.
10 லட்சம் மற்றும் அதற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள், முதல் கரோனா அலையிலிருந்து தப்பித்துவிட்டது. இம்முறை பெருந்தொற்று அங்கு பரவ வாய்ப்புள்ளது. வைரஸ் அங்கிருந்து கிராமங்களில் பரவ நீண்ட காலம் எடுத்து கொள்ளாது. அப்படி பரவும் பட்சத்தில், நாட்டின் சுகாதார கட்டமைப்பு மிக பெரிய அளவில் பாதிப்படையும்" என்றார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இக்கூடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.