மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா கடத்தல் வழக்குகளில், சுமார் 600 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடத்தல் வழக்குகளின் இறுதி கட்ட விசாரணைக்காக, போலீசார் கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், காவல்துறையினர் கஞ்சா மாதிரிகளை மட்டும் சமர்ப்பித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 600 கிலோ கஞ்சா எங்கே? என்று கேட்டபோது, காவல் நிலைய சேமிப்பு கிடங்குகளில் எலித்தொல்லை இருப்பதாகவும், அங்கு வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த பதிலைக் கேட்டு நீதிமன்றமே சிறிது நேரம் அதிர்ந்துவிட்டது.
போலீசாரின் பதிலை ஏற்க மறுத்த நீதிமன்றம், வரும் 26ஆம் தேதிக்குள் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஒருவேளை உண்மையில் கிடங்கில் எலித் தொல்லை இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: இளைஞரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 4 பெண்கள்.. பஞ்சாப் பகீர் சம்பவம்!