ஹைதராபாத்: மணிப்பூரில் சுமார் மூன்று மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பெண்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ கடந்த மே 4ஆம் தேதி எடுக்கப்பட்டதாகவும், இணைய சேவை தடை செய்யப்பட்டிருந்ததால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது வீடியோ வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக பிரமுகருமான குஷ்பூ தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இது முற்றிலும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக, மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் ரீதியாக பழிசுமத்துவதை விட்டுவிட்டு, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட வேண்டும். இந்த கொடூர சம்பவத்தை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.
இதனிடையே இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று மாலைக்குள் மேலும் சில குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது. ராஜஸ்தான் மற்றும் மணிப்பூரில் இருந்து இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.