உத்தரப் பிரதேச மாநிலம் பதாவும் மாவட்டம் உகைதி பகுதியைச் சேர்ந்த 50 வயதான அங்கன்வாடி பெண் பணியாளர், இறந்து கிடந்ததாக உகைதி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், சிலரால் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், உடற்கூராய்வின் தகவலின்படியும், உறவினர்களின் புகார் அடிப்படையிலும் கோயில் பூசாரி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில் காவல் துறையினர் அலட்சியமாக செயல்பட்டதாகவும், வழக்குப்பதிவு செய்யவும் காலம் தாழ்த்தியதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த மூதாட்டி சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருந்ததால், காப்பாற்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக உபி காவல் துறையினர் விரைவாக விசாரணை நடத்திட காவல் துறை தலைவருக்கு, தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கடிதம் ஒன்றை ஏழுதியுள்ளார். இதுமட்டுமின்றி, இறந்த மூதாட்டியுன் குடும்பத்தினரை, தேசிய பெண்கள் ஆணையத்தை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர்.