மும்பை: காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகளில் இருந்த சரத் பவார், கடந்த 1999ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி(Nationalist Congress Party) தொடங்கினார். அன்று முதல் சுமார் 24 ஆண்டுகளாக் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் பதவி வகித்து வந்தார்.
தற்போது மகாராஷ்ட்ராவில் முக்கிய எதிர்க்கட்சியாக தேசியவாத காங்கிரஸ் இருக்கிறது. அக்கட்சிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த சூழலில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 2ஆம் தேதி சரத் பவார் அறிவித்தார். இந்த அறிவிப்பு மகாராஷ்ட்ரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், சரத் பவாரின் இந்த முடிவுக்கு, அவரது மகள் சுப்ரியா சுலேவுக்கும், அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலே காரணம் என்று கூறப்படுகிறது. சரத் பவாருக்கு அடுத்தபடியாக அஜித் பவார்தான் கட்சியைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவை கட்சிக்குள் பிரதானப்படுத்த தொடங்கியதாக தெரிகிறது. இதனால், அடுத்த தலைவர் யார்? என்பதில் சுப்ரியா சுலேவுக்கும், அஜித் பவாருக்கும் இடையே போட்டி நிலவுவதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அஜித் பவாரை தங்கள் வசப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக 40 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அஜித்பவார் பாஜவில் இணைய சாத்தியங்கள் இருப்பதை உணர்ந்த சரத்பவார், கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதற்காக, அஜித்பவாருடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் பாஜகவில் இணையும் முடிவை அஜித் பவார் மாற்றிக் கொண்டதாகவும் தெரிகிறது. அதன் பிறகே சரத் பவார் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு புறம் தேசியவாத காங்கிரசின் தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். மறுபுறம் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக ஆலோசிக்க, பிரபுல் படேல், அஜித் பவார், சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆலோசனை நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று(மே.5) காலை மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பிரபுல் படேல், "சரத் பவார் எங்களுடன் ஆலோசிக்காமல் ராஜினாமா முடிவை எடுத்தார். இதையடுத்து கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கோரிக்கைகளை இன்று நாங்கள் ஆலோசித்தோம். அதன்படி, சரத் பவாரின் ராஜினாமாவை ஒருமனதாக நிராகரித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அவரே தலைவராக தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறினார்.
முன்னதாக இன்று காலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், "2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவம் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொடர்ந்து தேசியவாத காங்கிரசை வழிநடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.