மும்பை: போலந்து, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதை மருந்துகளை கடத்தி வந்து டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, உத்தரபிரதேச மாநிலங்களில் விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு (NCB) புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் மும்பையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், போலீசாரிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாகவே போதைப் பொருள் பரிமாற்றம் நடந்தது தெரியவந்துள்ளது. போதை மருந்துகளை வாங்குவோரும், அதை விற்பனை செய்வோரும் நேரடியாக சந்திக்காமல், இணையத்தின் மூலமாகவே உரையாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பணப்பரிமாற்றம் கூட கிரிப்டோகரன்சி மூலம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடத்தலில் சம்பந்தப்பட்ட பிறரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், LSD (Lysergic acid diethylamide) எனப்படும் ஸ்டாம்ப்பை விட சிறிதான தாளில், போதை மருந்தை தோய்த்து விற்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்த போது, இக்கும்பல் பிடிபட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து 2.5 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட கஞ்சா, ரூ.4.65 லட்சம் ரொக்கம், ரூ.20 லட்சம் வங்கிக்கணக்கு ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வாடிக்கையாளர்கள் போதை மருந்தை ஆர்டர் செய்த உடன், அவற்றை நெதர்லாந்து மற்றும் போலந்து நாடுகளில் இருந்து கடத்தி, விற்பனை செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.