டெல்லி : கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் திவால் தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம், அந்நிறுவனத்திற்கு நிவாரணம் அளிக்கும் விதமாக திவால் தீர்வு அதிகாரியை நியமித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமியிடமாக கொண்டு இயங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனம் கோ பர்ஸ்ட். பட்ஜெட் ப்ரீ விமான சேவைகளை வழங்கி வரும் கோ பர்ஸ்ட் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 5வது மிகப் பெரிய ஏர்லைன்ஸ் என பெயர் பெற்றது. இந்த கோ பர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் பழமையான வணிக குழுமமான வாடியா குருப் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கோ பர்ஸ்ட் கடந்த வாரம் திவால் தீர்வு நடவடிக்கைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) தாமாக முன்வந்து விண்ணப்பித்து இருந்தது. இந்த வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் ராமலிங்கம் சுதாகர் மற்ரும் எல்.என் குப்தா ஆகிய இரண்டு நீபதிகள் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் திவால் தீர்வு நடவடிக்கைக்கு அதிகாரியை நியமிக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. மேலும், கோ பர்ஸ்ட் நிறுவனம் கடன்களை தாமதமாக செலுத்துவதற்காக Moratorium எனப்படும் கடனை தாமதமாக வழங்கும் சட்ட உரிமையை தீர்பாயம் அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த உத்தரவின்படி, கோ பர்ஸ்ட் நிர்வாகம் தற்போது திவால் தீர்வு நடவடிக்கை அதிகாரியின் கட்டுப்பாட்டுக்கு செல்கிறது. திவால் தீர்வு அதிகாரியாக அல்வாரெஸ் மற்றும் மார்சல் நிறுவனத்தின் அபிலாஷ் லால் என்பவரை தீர்ப்பாயம் நியமித்து உள்ளது. தீர்வு அதிகாரியிடம் 5 கோடி ரூபாய் டெபாசிட் தொகை செலுத்தும்படி கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் தற்போதைய மேலாண்மை நிர்வாக குழு கலைக்கப்பட்டு, திவால் தீர்வு நடவடிக்கைக்கு மேலாண்மை நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் எந்தவொரு ஊழியரையும் ஆட்குறைப்பு, பணிநீக்கம் செய்யக்கூடாது எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
திவால் சட்டத்தின் கீழ் கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் திவால் தீர்வு நடவடிக்கைக்கு அதிகபட்சமாக 330 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்ததிவால் தீர்வு நடவடிக்கை காலகட்டத்தில் கடன் வழங்கியவர்களுக்கு கோ பர்ஸ்ட் நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்த தேவையில்லை எனக் கூறப்படுகிறது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கோ பர்ஸ்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி, அந்நிறுவனத்துக்கு ஏறத்தாழ 11 ஆயிரத்து 463 கோடி ரூபாய் கடன் இருப்பது தெரியவந்து உள்ளது. இதில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன், விமான குத்தகைதாரர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட அனைத்து வகையான நிலுவைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திவால் தீர்வு அதிகாரி பொறுப்பேற்கும் நிலையில் அதற்கு ஏதுவாக வரும் மே 19ஆம் தேதி வரை விமான டிக்கெட் விற்பனையை கோ பர்ஸ்ட் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது. இதன் காரணமாக மே 19 ஆம் தேதி வரை பயணிகள் கோ பர்ஸ்ட் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியாது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தல் என வதந்தி... விவிபாட், வாக்கு இயந்திரங்களை வீதியில் வீசி மக்கள் கலவரம்!