டெல்லி: இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க தேசிய அளவில் 47 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் 'சஹகர் சே சம்ரித்தி'யின் மூலம் கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதற்காக புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படுகிறது.
இந்த தேசிய அளவிலான குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு தலைமையில் நாடு முழுவதிலும் இருந்து 47 உறுப்பினர்கள் இடம் பெறுவர். கடந்த 2002ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கூட்டுறவுக் கொள்கையானது, கூட்டுறவுத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, கூட்டுறவுத்துறையானது, தன்னாட்சி, சுயசார்பு மற்றும் ஜனநாயக ரீதியாக செயல்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் சுமார் 8.5 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
இந்த சங்கங்களில் 29 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்தக் கூட்டுறவு சங்கங்கள், வேளாண் துறை, பால் மற்றும் மீன் வளம், வீட்டுவசதி, நெசவு, கடன், சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையை வலுப்படுத்தி, அனைத்து தளத்திலும் விரிவாக்கம் செய்வதற்காகவே, இந்த புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை வரவேற்ற பிரதமர் மோடி