குஜராத் : அரபிக்கடல் வழியாக கடத்த முயன்ற 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருளை, இந்திய கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரபிக் கடல் வழியாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் நடக்க உள்ளதாக போதைப் பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து ரகசிய திட்டம் தீட்டிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அரேபிக்கடல் பகுதியில் நுழைந்த கப்பலை சுற்றிவளைத்த இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடத்தல் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். கப்பலில் இருந்து மூட்டை மூட்டையாக இருந்த போதைப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 கிலோ அளவிலான மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச சந்தையின் இந்த போதைப் பொருளின் மதிப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னரே இந்த கடத்தல் குறித்த தகவல் கிடைத்ததாகவும், எங்கிருந்து எங்கு கடத்தப்படுகிறது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைக் காலங்களில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய அளவிலான போதைப் பொருள் இது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு தோல்வி - தேர்தல் வியூகத்தை மாற்றுமா பாஜக!