புதுச்சேரி மாநில காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்றது. மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் தலைவி பஞ்ச காந்தி தலைமை தாங்க, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், இதில் லாஸ்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவிக்கும் நூதன முறையில் மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மூலம் நாட்டில் மதக் கலவரத்தை ஏற்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அந்த திரைப்படம் முழுவதும் பொய்யால் உருவாக்கப்பட்டுள்ளது என்று பலர் கூறி வருகின்றனர்.
மேலும், அந்த படத்திற்கு வரிவிலக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்த நாராயணசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாட்டில் பாஜக தலைவராக இருந்த போது பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தவர் தற்போது வாய் மூடி மௌனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, பிரபல இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி டைரக்ஷனில் வெளியாகியுள்ள தி காஷ்மீர் ஃபைல்ஸ் (Kashmir Files) திரைப்படம் வசூலை அள்ளி குவித்துவருகிறது. இந்தப் படத்தில் அனுபவம் கெர், மிதுன் சக்ரபோர்த்தி, பல்லவி ஜோஷி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் 1990களில் ஜம்மு காஷ்மீரில் பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’நானே வருவேன்’ - தனுஷின் அட்டகாசமான புது லுக்!