டெல்லி: வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணியை சூழ்ந்த இளைஞர்கள் சிலர் அவர் மீது வர்ணப்பொடியை தூவியதுடன், பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில், மகளிர் தினத்தையொட்டி டெல்லி மாநில மகளிர் ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். மகளிர் நலனுக்காக சிறப்பாக செயல்பட்ட 100 பெண்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால், "ஜப்பான் பெண் மீது சிலர் வர்ண பொடிகளை தூவி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ வெளியாகி உள்ளது. தன்னை காப்பாற்றும் படி அவர் அலறுகிறார். ஆனால் யாரும் தடுக்கவில்லை. இதுதொடர்பாக டெல்லி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
நான் சிறுமியாக இருந்த போது என் தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன். நான் 4ஆம் வகுப்பு படிக்கும் வரை அவருடன் தான் வசித்தேன். திடீரென வீட்டுக்குள் நுழையும் அவர் என்னை பயங்கரமாக தாக்குவார். என் தலை முடியை பிடித்து இழுத்து சுவரில் தள்ளுவார். தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தினாலும் தாக்குதலை நிறுத்தமாட்டார். என் தந்தைக்கு பயந்து பலமுறை கட்டிலுக்கு கீழே பதுங்கியிருக்கிறேன்.
இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக பெண்களுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது என இரவு முழுவதும் யோசித்திருக்கிறேன். இந்த பிரச்னை தான் பெண்களின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்ற உறுதியை எனக்கு அளித்தது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பாக 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் புகார்கள் வந்துள்ளன. மகளிர் குறைதீர்க்கும் தொலைபேசி சேவைக்கு ஒருநாளைக்கு 2000 முதல் 4000 அழைப்புகள் வருகின்றன" என கூறினார்.
டெல்லி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாக கடந்த 2015ஆம் ஆண்டு சுவாதி மாலிவால் நியமிக்கப்பட்டார். அதற்கு முன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசகராக இருந்து வந்தார். நவீன் ஜெய்ஹிந்த் என்பவரை திருமணம் செய்த நிலையில், 2020ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அண்மையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்பு, இளம் வயதில் தனது தந்தை தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறினார். தாயையும், தம்மையும் தாக்கியதுடன், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் குறிப்பிட்டார். 8 வயது முதல் இந்த கொடுமையை அனுபவித்ததாகவும், 15 வயதுக்கு பிறகு தந்தையை எதிர்த்ததாகவும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. வாடகைக்கு வீடு எடுத்து போலி வீடியோ.. 3 பேர் கைது!