மகாராஷ்டிரா: மும்பை மாநகராட்சியின் காட்கோபரில் ராஜாவாடி என்ற மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் குர்லாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் எல்லப்பா (24) என்ற நோயாளி கல்லீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்தார்.
கண்ணுக்குக்கீழே கடித்துக் குதறிய எலிகள்
மயக்கநிலையிலிருந்த அவரை ஊழியர்கள் கீழ்த்தளத்திலுள்ள அவசர சிகிச்சை பிரிவு வார்டில் சேர்த்திருந்தனர். அப்போது, வார்டுக்குள் நுழைந்த எலிகள் சில, அவரது கண்ணுக்குக் கீழே கடித்துக் குதறியுள்ளது.
இதை வெளியே சொல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் மறைத்ததாகக் கூறப்படுகிறது.
நோயாளியின் உறவினர் ஒருவர், கண்ணுக்குக் கீழே காயம் இருப்பதைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
'எலி கடித்திருக்கலாம்' என்று ஊழியர்கள் சர்வ சாதாரணமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு உறவினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் மும்பை மேயர் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர். எலி கடித்த சம்பவத்தை மருத்துவமனை நிர்வாகம் உறுதிபடுத்தியது.
ஆனால், காயங்கள் மேலோட்டமானவை என்றும்; நோயாளியின் கண் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நோயாளியின் உடல்நிலை மோசமடைய, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எலி கடித்ததால், மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய மும்பை மாநகராட்சியில், நோயாளிகளை எலி கடிப்பதைத் தடுக்க முடியவில்லை என பாஜகவினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவிகளை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலின் தாக்குதல் காணொலி வைரல்