மும்பை: மகாராஷ்டிரா - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜ், சமூக சீர்திருத்தவாதிகள் மகாத்மா ஜோதிபா புலே மற்றும் சாவித்திரி பாய் புலே ஆகியோர் குறித்து கர்நாடக ஆளுநர் பகத் சிங் கோஷியாரி வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் ஆளும் ஏக்நாத் சிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு மவுனம் காத்து சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோருக்கு அவமரியாதை செய்ததாக கூறி, எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்ரே தலைமையிலான மகா விகாஷ் அகாதி கூட்டணி "ஹலா போல்" போராட்டத்தில் ஈடுபட்டது.
போராட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.மும்பை ஜெ.ஜெ. மருத்துவமனையிலிருந்து தொடங்கிய மெகா பேரணியில் சிவ சேனா உத்தவ் தாக்ரே பிரிவு, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மராட்டிய அரசுக்கு எதிரான பதாகைகள் மற்றும் மன்னர் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோரின் பேனர்களைச் சுமந்து கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை பேரணி சென்றனர்.கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், அதன்பின் ஆளும் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக ’புல்டோசர்’ வழங்கிய தந்தை!!