மும்பை (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மிரா ரோடு காவல் நிலையத்தில், இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதன்படி, சனாதன தர்மம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ மற்றும் 295 ஏ ஆகிய இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர், அவர் பேசுகையில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல், சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருப்பதற்கு தன்னுடைய வாழ்த்துகள் என கூறினார். மேலும், சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது என்றும், கொசு, டெங்கு, மலேரியா, கரோனா ஆகியவற்றை எல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும் எனவும் பேசினார்.
அது மட்டுமல்லாமல், சமத்துவத்துக்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்களது கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இதனை கடுமையாக எதிர்த்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஜகத்குரு பரமன் ஆச்சார்யா, உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பகிரங்கமாக அறிவித்தார். அதேநேரம், உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
மேலும், சனாதானம் குறித்து அவதூறு கருத்து வெளியிடுபவரின் நாக்கை அறுத்தும், கண்களை பிடிங்கியும் எறிவோம் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பகிரங்கமாக பொது மேடையில் தெரிவித்து உள்ளார். இதனை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த பார்மர் பகுதியில் கடந்த வாரம் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாக அறியப்படுகிறது.
இதனிடையே, சனாதனம் குறித்து தமிழ்நாடு அரசின் 12ஆம் வகுப்பு அறிவியலும் இந்தியப் பண்பாடும் என்ற பாடப் புத்தகத்தில் சனாதனத்தை ‘அழிவில்லாத நிலையான அறம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது புதிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனம் பற்றிய பாடம்!