மும்பை : இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள மும்பையைச் சேர்ந்த உணவு விநியோகம் செய்யும் டப்பாவாலாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ள நிலையில், முடிசூட்டு விழாவில் மன்னர் சார்லஸுக்கு வழங்க விஷேச பரிசுகளை அவர்கள் வாங்கி உள்ளனர்.
நவீன உலகில் உணவு முதல் அனைத்துப் பொருட்களையும் டெலிவரி செய்யும் பணிகளுக்கு டப்பாவாலாக்கள் தான் முன்னோடி என்று கூறினால் அது மிகையாகாது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் ஆங்கிலேயர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு, உணவு டெலிவரி செய்ய கடந்த 1890ஆம் ஆண்டு முதல் இந்த டப்பாவாலாக்கள் பணியமர்த்தப்பட்டனர்.
போதிய தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே குறிப்பிட்ட நபரின் வீட்டில் இருந்து பெறப்படும் சாப்பாட்டு கேரியர் பல டப்பாவாலாக்கள் கைகளில் மாறினாலும், சரியான நபரை சென்றடைவதால் இவர்களுக்கு என தனி மதிப்பு உண்டு. அப்படி இவர்களின் பணிகளை பார்த்து மிரண்டு போனவர்களில் ஒருவர் தான், தற்போது இங்கிலாந்து மன்னராக முடிசூட உள்ள மூன்றாம் சார்லஸ்.
கடந்த 2003ஆம் ஆண்டு மூன்றாம் சார்லஸ் இந்தியா வந்த போது, டப்பாவாலாக்களை சந்தித்துப் பேசினார். அதேபோல் கடந்த 2005ஆம் ஆண்டு சார்லஸ் - கமீலா தம்பதியின் திருமணத்திற்கு மும்பையில் இருந்து டப்பாவாலாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டப்பாவாலாக்கள் சங்கத்தின் சார்பில் இரண்டு பேர், மன்னர் சார்லஸ் - கமீலா தம்பதியின் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
அந்த அளவுக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தினருடன் இந்த டப்பாவாலாக்கள் நல்லுறவு கொண்டு இருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து மன்னராக வரும் மே 6ஆம் தேதி மூன்றாம் சார்லஸ் முடிசூட உள்ளார். இந்த விழாவை மிக பிரமாண்டமாக நடத்த பக்கிங்ஹாம் அரண்மனைத் திட்டமிட்டு உள்ளது.
ஏறத்தாழ 3 நாட்களுக்கு மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள மும்பையைச் சேர்ந்த டப்பாவாலாக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தூதரகத்தில் இருந்து டப்பாவாலாக்களின் சங்கத்திற்கு அழைப்பிதழ் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள டப்பாவாலாக்கள் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் மன்னர் சார்லஸுக்குப் பரிசளிக்க பிரத்யேகமான பொருட்களை டப்பாவாலாக்கள் தேடித் தேடி வாங்கி உள்ளனர். முடிசூட்டு விழாவின் போது மன்னர் சார்லஸுக்கு புனேர் பகாதி தலைப்பாகையும், வார்காரி சமூகத்தினர் செய்த வேலைப்பாடுகள் நிறைந்த சால்வையையும் பரிசாக வழங்க டப்பாவாலாக்கள் திட்டமிட்டு உள்ளனர்.
புனேரி பகாதி என்பது ஒரு தனித்துவமான தலைப்பாகையாகும். கடந்த 2009ஆம் ஆண்டு இந்த புனேரி பகாதி தலைப்பாகைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் புனே மக்களின் பாரம்பரியம், பெருமை மற்றும் கவுரவத்தின் அடையாளமாக புனேரி பகாதி தலைப்பாகை கருதப்படுகிறது.
இதையும் படிங்க : Karnataka Election: வேட்பாளரின் உறவினர் வீட்டில் காய்த்த பணம் - வருமான வரித்துறையினர் அதிர்ச்சி!