டெல்லி : முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளத்தை சேர்ந்தவர் ஒருவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “126 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக திகழ்கிறது. இந்த அணையை அகற்றிவிட்டு புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசுகிறது, நாங்கள் 5 மாவட்ட மக்களின் வாழ்க்கை குறித்து கவலைக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முல்லைபெரியாறு அணை
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர், சிடி ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கேரள அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அணையை அகற்றிவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அணை தாழ்வான பகுதியில் இருப்பதால் மக்களுக்கு ஆபத்து என்று கேரள அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதற்கிடையில் கேரள அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில் முல்லைபெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாகவும், நீரியல் ரீதியாகவும், நில அதிர்வு ரீதியாகவும் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கேரள அரசின் தடை மனப்பான்மையால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டது. அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தாழ்வான பகுதிகள் சேதமடைந்துள்ளன என்ற கேரளாவின் வாதத்தை எதிர்த்த தமிழ்நாடு அரசு, போதுமான எச்சரிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரிவித்த பின்னரே தண்ணீர் திறக்கப்படுகின்றன என்று கூறியது.
கேரள அரசின் வாதத்திற்கு எதிர்ப்பு
தொடர்ந்து கேரள அரசு, முல்லைபெரியாறு அணையின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என்று கூறியது. கேரள அரசின் இந்த வாதத்தை தமிழ்நாடு அரசு நிராகரித்தது. தொடர்ந்து, தமிழ்நாட்டின் பிரமாணப் பத்திரத்தை அறிய கேரள அரசு கால அவகாசம் கோரியது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை நவ.22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ச்சியான மனுக்கள் மூலம் துன்புறுத்தப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மனுக்கள் மூலம் துன்புறுத்தல்
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான மனுக்களை எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டாம், மனுதாரர்களின் உள்ளீடுகளை ஒருமுறை பரிசீலிக்க வேண்டும் என்று கூறியது.
இந்த வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு தரப்பில் வழக்குரைஞர் சேகர் நபாடே (shekhar naphade) ஆஜரானார். கேரள அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா (Jaideep Gupta) வாதாடினார்.
இதையும் படிங்க : முதல்முறையாக முல்லைப்பெரியாறு அணையில் நான்கு அமைச்சர்கள் ஆய்வு!