புதுச்சேரி : புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு சதித் திட்டம் தீட்டி வருவதாக திருமாவளவன் எம்பி கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
திருமாவளவன் எம்.பி., பேட்டி: புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டில் டாக்டர். அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்ட திருமாவளவன் எம்.பி., தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சுதந்திரமாக செயல்படவில்லை.
பாஜக அரசு புதுச்சேரி அரசுக்கு கடுமையாக நெருக்கடிகள் கொடுக்கிறது. புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த ஆளுநர் மூலமாக ஒன்றிய அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. ஒன்றிய அரசை முன்னாள் முதல்வர் நாராயணசாமி எதிர்த்தது போல் எதிர்க்காமல் ரங்கசாமி மௌனம் காப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்கலை நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு: புதுச்சேரி அரசியலில் ஒன்றிய அரசின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. கல்லூரி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு என்பது உயர்கல்வி படிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் செல்பவர்களை தடுக்கும் செயல்.
பட்டியலின மற்றும் பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டும் என்ற கொள்கையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது. இதற்கு தான் தேசிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது. சட்டப்பேரவையில், இரண்டு முறை தீர்மானம் இயற்றப்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி: ஆனால் அதை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காதது, தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் செயல். தமிழ்நாடு ஆளுநர் சட்டரீதியான தன் கடமைகளை மறந்து செயல்படுகிறார். பாஜகவிற்கு சேவை செய்யும் கட்சியாக அதிமுக தமிழ்நாட்டில் மாறியுள்ளது.
இந்த நிலையில் ஆளுநர் மீது தாக்குதல் என்று பொய்யான வதந்தியை பரப்பி ஆளும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயல்கிறது பாஜக. நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை ஒன்றிய அரசு விதைத்து வருகிறது. புதுச்சேரிக்கு வருகை புரியும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு புதுச்சேரியை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்து உள்ளது வரவேற்கத்தக்கது ” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது - திருமாவளவன்