சிவமொக்கா: கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ளது அச்சபுரா கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (45) என்பவரின் உடல், காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் இருந்த காரிலிருந்து இரண்டு நாள்களுக்குப் பின்பு (செப். 28) கண்டெடுக்கப்பட்டது.
தீர்த்தப்பள்ளி காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வினோத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. பின்னர், குடும்பத்தாரிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து, காவல் துறையினரின் தீவிர விசாரணையில் வினோத்தின் மனைவி, மகன்கள், உறவினர்கள் இருவர் ஆகியோர் இணைந்து வினோத்தை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.
இரும்புக் கம்பியால் தாக்குதல்
இதனைத் தொடர்ந்து வினோத்தின் மனைவி பினு (42), அவரது மூத்த மகன் விவேக் (21), இளைய மகன் விஷ்ணு (19), பினுவின் சகோதரி மகன் அசோக் (23), வினோத்தின் சகோதரர் சஞ்சய் (36) ஆகியோர் நேற்று (அக். 1) கைதுசெய்யப்பட்டனர்.
இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், "சம்பவம் நடந்த செப்டம்பர் 26ஆம் தேதி அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் இருவர் ஆகியோர் இணைந்து வினோத்தை இரும்புக் கம்பியால் கழுத்தை நெரித்தும், இரும்புக் கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியும் உள்ளனர்.
பின்னர், அவரை காரில் அமரவைத்து ஹுனசேகோப்பா காட்டுப்பகுதிக்கு கொண்டுசென்றனர். மேலும், தற்கொலை போன்று தோற்றமளிக்க அவரைச் சித்ரவதை செய்து காயம் ஏற்படுத்தி, பெட்ரோல் ஊற்றி காரை எரித்தனர்.
ஐவர் கைது
நீண்ட காலமாக, வினோத் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருந்துள்ளார். இதனால், அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க சமீபத்தில், வினோத் நிலம் ஒன்றை விற்று, அதன் பெரும் பங்கை தனது நண்பர் ஒருவருக்குக் கொடுத்துள்ளார். மேலும், மற்றொரு சொத்து ஒன்றையும் வினோத் விற்பதற்கு முடிவெடுத்துள்ளார்.
இதனால், இரட்டிப்பு கோபத்தில் இருந்த குடும்பத்தினர் வினோத்தை கொலைசெய்து, தற்கொலை போன்று நாடகமாடியுள்ளனர்" என்றனர்.
இதையும் படிங்க: ஓராண்டுக்குப் பிறகு திறக்கப்பட்ட இந்திய - நேபாள எல்லை