டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 29. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை அறிவித்து, அதன் மூலம் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டார். ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளைச் சேர்ந்த 22 தலைவர்களுக்கு மம்தா அழைப்பு விடுத்தார்.
அதன்படி, டெல்லியில் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன. திமுக சார்பில் டி.ஆர். பாலு பங்கேற்கிறார். தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சிகளான ஆம்ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்டவை இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க: 10 மடங்கு வேகம் பெறப்போகும் இணைய சேவை...! 5ஜி ஏலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்