புதுச்சேரி: போலி ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி இரண்டரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவர்களை கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பணம் வைப்பு எந்திரங்களில் நூதன முறையில் பல லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதே போன்று, கடந்த 17ஆம் தேதி இரவு புதுச்சேரி - கடலூர் சாலை மணப்பட்டு கிராமம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில், மாஸ்க் அணிந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியிருப்பதாக வங்கி மேலாளர் சாந்தி, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஏடிஎம்மில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஏடிஎம்மில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் பெரிய விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் புதுச்சேரியிலும் அவர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை: கைதான அமீரை 5 நாள் காவலில் எடுக்க அனுமதி