மறைந்த பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
உத்தரப் பிரதேசம், லக்னோவில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற மோடி, மலர் வளையம் வைத்து தனது மரியாதையை செலுத்தினார்.
தொடர்ந்து கல்யாண் சிங் மனைவி ராம்வதி தேவி, மகன் ராஜீவர் சிங் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, "தகுதி வாயந்த ஒரு தலைவரை நாம் இழந்துள்ளோம். அவர் விட்டுச் சென்ற நன்மதிப்புகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவரது கனவுகளை நனவாக்க நாம் அயராது உழைக்க வேண்டும்.
மக்கள் நலன் என்பதையே தனது வாழ்வின் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தவர் கல்யாண் சிங். உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர். நேர்மை, நல்ல நிர்வாகத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் கல்யாண் சிங்" என்றார் மோடி.
89 வயதான கல்யாண் சிங் உத்தரப் பிரதசேத்தின் முதல் பாஜக முதலமைச்சர் ஆவார். இவரது பதவிக்காலத்தில்தான் அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இதையும் படிங்க: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்