ஷில்லாங்: வட கிழக்கு கவுன்சில் என்பது, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களை உள்ளடக்கிய வடகிழக்கு பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான மையமாக செயல்படுகிறது.
இந்த வட கிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டம் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று(டிச.18) காலை நடைபெற்றது. மாநில கன்வென்சன் மைய அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் 50 முறை வட கிழக்கு பிராந்தியத்திற்கு வருகை தந்து, பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
வன்முறை மற்றும் பிரிவினைவாதம் அதிகரித்து காணப்பட்ட வடகிழக்கு பிராத்தியத்தில், கடந்த எட்டு ஆண்டுகளில் வன்முறை, கிளர்ச்சி சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்துள்ளன. பாதுகாப்புப்படை வீரர்கள் மீதான தாக்குதல்கள் 60 சதவீதம் குறைந்துள்ளன- தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பதும் வெகுவாகக் குறைந்துள்ளது" என்றார்.