புதுச்சேரி: புதுச்சேரியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறையினருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு நகரின் பல பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேரு வீதி ராஜா தியேட்டர் சந்திப்பில் டிஜிபி ஆனந்தமோகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு செய்தார்.
இரவு நேர ரோந்து பணியின்போது வாகன சோதனையை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இரவு நேரப் பணியில் ஈடுபட்ட காவலரிடம் அமைச்சர் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: 1000 கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடு, 50 கிலோ கோழி- மருமகனுக்கு சீர் செய்த மாமனார்