புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் புத்தாண்டை கொண்டாட இரவு ஒரு மணிக்கு மேல் அனுமதி இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் புத்தாண்டுகளை கொண்டாட வேண்டும் எனவும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தற்போது 10, 12 ஆம் வகுப்பு தவிர்த்து, அனைத்து வகுப்புகளுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ளது. வரும் கல்வியாண்டில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கல்வியாண்டு நாட்காட்டி, அரசாணையை சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று (டிச.26) வெளியிட்டார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டம்: பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது, “புதுச்சேரியில் 126 அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு அமல்படுத்தப்பட்டது. வரும் 2024-25 ஆம் கல்வியாண்டு 220 நாட்களை உள்ளடக்கியது. இதற்கான பள்ளி செயல்படும் நாட்கள் குறித்த நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு, தமிழ்நாடு பாடநூலை பின்பற்றி வந்த நிலையில், வரும் 2024-25 கல்வியாண்டில், ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். மேலும், புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தினாலும் தமிழ் கட்டாய பாடமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஆசிரியர் காலி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்: புதுச்சேரியில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. தொடக்கப் பள்ளியில் 145 காலிப்பணியிடம் நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு ஆய்வு நிலையில் உள்ளது. இதனால், விரைவில் பணியாணை தரும் சூழல் உள்ளது. 300 பயிற்சி பெற்ற பட்டதாரிகள், 91 விரிவுரையாளர்கள், 40 மொழி ஆசிரியர்கள் உட்பட பல காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரவு ஒரு மணிக்கு மேல் கடற்கரையில் புத்தாண்டுகளை கொண்டாடக்கூடாது என்று தெரிவித்துள்ள அவர், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் புத்தாண்டுகளை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கொண்டாட வேண்டும் என்றார்.
மாணவர்களுக்கு சுடிதார் சீருடை; ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: தமிழகத்தில் பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து வரலாம் என அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அரசு பள்ளியில், ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து வருவது குறித்து முதலமைச்சர் ரங்கசாமியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்ட சைக்கிள் தரமற்று இருப்பதாக புகார் வந்துள்ளது. இது குறித்து, முதலமைச்சர் விாரணை நடத்தி வருகிறார். எனவே, இது குறித்து வெகு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டம்: புதுச்சேரியில் 'ப்ரீபெய்டு மின் மீட்டர்' (Prepaid electricity meter scheme) திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. எனவே, அவர்கள் ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த தகுதியில்லை. ஏனெனில், நாராயணசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் கொண்டுவந்த திட்டத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் செயல்படுத்தினாலும், விவசாயிகளுக்கும், குடிசை வீடுகளுக்கும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வை தந்த ஐஐடி மெட்ராஸ்..!