பெங்களூரு : மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒரு முடிவெடுத்திருக்கலாம், ஆனால் இது எங்களின் உரிமை என்று பசவராஜா கூறினார்.
தமிழ்நாடு- கர்நாடகம் இடையே மீண்டும் சச்சரவை ஏற்படுத்தியுள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மாயி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலினுக்கு பதில்
அந்த அறிக்கையில், “மேகதாது திட்டம் தொடர்பாக ஏற்கனவே ஒரு விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது கூடுதலாக காவிரி நீரை குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகாவுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன.
முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அரசாங்கம் இந்தத் திட்டத்தை கைவிடாது. அதற்கு எந்தக் காரணமும் ஏற்படவில்லை. இதில் மத்திய அரசு தலையிட்டு எங்களுக்கு சட்டப்படி உரிமை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆதரவு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இவ்வாறு அறிக்கை வெளியாகியுள்ளது.
முன்னதாக மேகதாது அணை குறித்து பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் டி.கே. சிவக்குமார், “கர்நாடக அரசு காலம் தாமதிக்காது மேகதாது அணை கட்ட பூமி பூஜை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : மேகதாது அணை விவகாரம்: அரசின் முடிவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு!