வங்காள விரிகுடாவில் உருவாக உள்ள புயலை எதிர்கொள்வதற்கு, மத்திய அமைச்சகங்கள் / மத்திய முகமைகள், மாநில அரசுகள் ஆகியவற்றின் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையிலான தேசிய நெருக்கடி மேலாண்மை குழு (NCMC) நேற்று (டிசம்பர் 1) ஆய்வுசெய்தது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர், வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து குழுவினரிடம் விளக்கினார். அப்போது, பேசிய அவர், "தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் டிசம்பர் 3ஆம் தேதி புயலாக உருமாற வாய்ப்புள்ளது.
4ஆம் தேதி கரையைக் கடக்கும்
இந்தப் புயல் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளின் இடையே டிசம்பர் 4ஆம் தேதி கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 90 முதல் 100 மைல் வேகத்திற்கு காற்று வீசக்கூடும். மேலும், ஆந்திர - ஒடிசா கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இந்தப் புயல், ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களுக்கும், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகள், கங்கை ஆற்றங்கரையோர பகுதிகளில் கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்றார்.
அனைத்தும் தயார்
ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான் நிகோபாரின் தலைமைச் செயலர்கள், மூத்த அலுவலர்கள், புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், புயலுக்குப் பின் உள்கட்டமைப்பில் ஏற்படும் குறைந்தபட்ச பாதிப்புகள் குறித்தும் தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவிடம் விளக்கமளித்தனர்.
மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக, 32 குழுக்களை தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) அமைத்துள்ளது என்றும், கூடுதல் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவசரகாலத் தேவைக்கு, கப்பல்கள், விமானங்களுடன் ராணுவம், கப்பல் படையைச் சேர்ந்த மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள், மத்திய முகமைகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்த பின்னர், அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா, "தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநில, மத்திய அரசு முகமைகளால் எடுக்கப்பட வேண்டும். மேலும், புயல் கரையைக் கடக்கும் முன்னர் உயிர் சேதங்கள் ஏற்படாத வகையிலும், உள்கட்டமைப்பு, பயிர்கள் சேதங்களைக் குறைக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு உறுதி
கடலில் தற்போது இருக்கும் மீனவர்கள் உள்பட அனைவரையும் விரைவாகக் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கும் பணியில் மாநில அரசுகள் மும்முரம் காட்ட வேண்டும். புயல் பாதிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளிலிருந்து மக்களை விரைவில் வெளியேற்ற வேண்டும்" என மாநில அரசுகளுக்கு வலியுறுத்தினார்.
மேலும், மாநில அரசுகளுக்கு உதவ மத்திய முகமைகள் தயார் நிலையில் இருக்கின்றன என அவர் உறுதியளித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் உள் துறை, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள், மீன்வளத் துறை, தொலைத்தொடர்புத் துறை அமைச்சகங்களின் பொதுச்செயலர்கள், மின் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையினர், தேசிய நெருக்கடி மேலாண்மை முகமைகளின் மூத்த அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை பொதுச்செயலாளர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: Bhima Koregaon case: சுதா பரத்வாஜுக்குப் பிணை - 8 பேருக்கு மறுப்பு