ஹைதராபாத்: மார்கதர்சி நிறுவனத்தின் 111வது கிளை, தெலங்கானா மாநிலம் உப்பல் அருகே இருக்கும் பெர்சாடிகுடாவில் துவங்கப்பட்டுள்ளது. மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் நிறுனவத்தின் நிர்வாக இயக்குநர் ஷைலஜா கிரண், இந்த கிளையை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றித் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஈ-நாடு நாளிதழின் நிர்வாக இயக்குநர் சி.ஹெச்.கிரண், ஈ-டிவி பாரத் நிர்வாக இயக்குநர் பிரிகதி ஆகியோர் பங்கேற்றனர்.
மார்கதர்சி நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழாவிற்குப் பின்னர் பேசிய நிர்வாக இயக்குனர் ஷைலஜா கிரண், மார்கதர்சி நிறுவனம், அதன் சந்தாதாரர்களுக்கு நம்பகமான, தரமான சேவைகளை வழங்க உறுதி கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
மார்கதர்சி போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனத்தில் சேமிப்பதன் மூலம், இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் கனவை அடைய முடியும். மேலும், மார்கதர்சி நிறுவனம் நெருக்கடியின் போதும் தொடர்ந்து செயல்படுகிறது. இன்னும் நூறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சேவை வழங்கும்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நிறுவன இயக்குனர் வெங்கடசாமி, துணைத் தலைவர்கள் ராஜாஜி, சம்பமூர்த்தி, பலராமகிருஷ்ணா, மூத்த மேலாளர் சிவிஎம் ஷர்மா, கிளை மேலாளர் திருப்பதி மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவ் நிறுவிய மார்கதர்சி நிறுவனம், 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு ஊழியர்களுடன் சிறிய அளவில் துவங்கப்பட்டது. இன்று இந்தியாவில் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 5 ஆயிரம் ஊழியர்களுடன் 110 கிளைகளைக் கொண்ட முன்னணி நிறுவனமாக உள்ளது. மேலும், 60 ஆண்டுகளைக் கடந்து, 60 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் மார்கதர்சி நிறுவனம் தனது சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.