மணிப்பூர்: மணிப்பூரில் வாழும் மெய்தீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மெய்தீஸ் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்தது. வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அன்று முதல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறைகளில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சவோம்பங் பகுதியில் நேற்று (ஜூலை 15) மாலை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது வீட்டிற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. மேலும், அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த பெண்ணின் முகத்தை சிதைத்துள்ளனர். மேலும், அந்த பெண் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல், அப்பகுதியை சுற்றி வளைத்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். அப்பகுதி மக்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்று இம்பால் மேற்கு மாவட்டத்தில் அவாங் செக்மாய் என்ற இடத்தில் மூன்று லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லாரிகள் முழுவதுமாக எரிந்து விட்டன. எல்பிஜி சிலிண்டர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, மர்மநபர்கள் அவற்றிற்கு தீ வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த லாரிகள் எதற்காக எரிக்கப்பட்டன? எரித்தவர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Manipur violence: தொடரும் வன்முறை.. மீளா துயரம்... துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!