டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் வசித்து வரும் மைத்தேயி சமூக மக்கள், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு குக்கி சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் பயங்கர வன்முறை வெடித்தது.
இதில் 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அண்மையில் மணிப்பூர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மக்கள் அமைதி காக்கும்படி வலியுறுத்தினார்.
இந்நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்து உள்ளது. கவுகாத்தி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையிலான குழுவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஹிமன்சு சேகர் தாஸ், அலோகா பிரபாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே டிவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "இம்பால் - திமாபூர் நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை பொதுமக்கள் அகற்ற வேண்டும். தடுப்புகளை அகற்றினால் தான் உணவு, மருந்து, பெட்ரோல்/டீசல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியும். சமூக நல அமைப்புகள் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, இயல்பு நிலையை கொண்டு வர முடியும்" என கூறியுள்ளார்.
இந்நிலையில், விசாரணை ஆணையம் விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 6 மாதங்களுக்கு மேல் அவகாசம் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மைத்தேயி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி, பிற பழங்குடியினர் சமூகங்கள் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணி நடைபெற்றது. அப்போது இருதரப்பினர் இடையே பயங்கர வன்முறை ஏற்பட்டது. வீடுகள் மற்றும் பல்வேறு பொதுச் சொத்துக்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த, கடந்த 29ம் தேதி மணிப்பூர் மாநில அரசு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு தற்போது விசாரணை ஆணையத்தை நியமித்து உள்ளது.
இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை ஏற்பட காரணம், அதிகாரிகள் ஏதாவது அலட்சியமாக நடந்து கொண்டார்களா?, போதிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் வன்முறையை கட்டுப்படுத்தி இருக்க முடியுமா? உள்ளிட்டவை குறித்து விசாரணை ஆணையம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி.. 21 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு!