ஹைதராபாத்: இயற்கை எழில் கொஞ்சும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்திற்கு 2023ஆம் ஆண்டில் மே மாதம் 3ஆம் தேதி மறக்க முடியாத கருப்பு தினமாகும். மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் 53 சதவீதத்துடன் பெரும்பான்மை பிரிவினரான மெய்தி சமூக மக்கள் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசித்து வருகின்றனர். குக்கி மற்றும் நாகாக்கள் உட்பட்ட பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 40 சதவீத மக்கள் மலை மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.
மணிப்பூரின் பெரும்பான்மை இனமான மெய்தி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என 10 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். மெய்தி சமூக மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக அறிவித்திருந்தது. பாஜகவின் இந்த அறிவிப்புக்குப் பிற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மே மாதம் 3ஆம் தேதி பழங்குடியினர் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மெய்தி சமூக மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக ஒரு ஊர்வலத்தை நடத்தினர். அப்போது நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. மாதக்கணக்கில் இந்த கலவரம் நடைபெற்ற நிலையில் 152 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
நிர்வாண ஊர்வலம்: மக்கள் மீது தாக்குதல், வீடுகளுக்கு தீ வைப்பு, கடைகள் மீது தாக்குதல் என்று தினம் தினம் கலவரம் தொடர்ந்து வந்த நிலையில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ வலைத்தளங்களில் பரவி உலகை உலுக்கியது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் பலரும் மத்தியிலும், மணிப்பூரிலும் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும், அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வேண்டும் எனவும், பாஜகவின் அரசியலால் தான் மணிப்பூர் கலவரம் ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மீது விமர்சனம்: மணிப்பூரில் நாளுக்கு நாள் கலவரம் அதிகரித்து வந்த நிலையில், பொதுமக்களின் வீடுகள் மட்டும் இன்றி அரசியல்வாதிகளின் வீடுகளும் சூறையாடப்பட்டன. மணிப்பூர் கலவரத்திற்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.
மேலும், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று நிலைமை குறித்து ஆய்வு செய்யாமல் பிரதமர் எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின. மேலும், பிரதமர் வெளிநாடு பயணத்தை முடித்து விட்டு ஐந்து மாநில தேர்தல் பிரசாரங்களில் கவனம் செலுத்தத் துவங்கியது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
களத்திற்குச் சென்ற ராகுல் காந்தி: மணிப்பூரில் மாதக்கணக்கில் கலவரம் நடைபெற்ற நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளாத நிலையில், ராகுல்காந்தி கலவரம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமை குறித்து ஆய்வு செய்தார்.
இதனை அடுத்து பிரதமருக்குப் பதிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தின் மீது விவாதம் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்தாலும், தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மணிப்பூர், ஹரியானா மாநிலங்கள் கலவரத்தால் பற்றி எரிவதை பாஜக விரும்புவதாக விமர்சித்தார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் விவாதத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் மணிப்பூரின் நிலைமை குறித்து விவாதிக்க விரும்பவில்லை எனவும், போராட்டங்களை மட்டுமே விரும்புவதாகவும் விமர்சித்திருந்தார்.
மௌனம் கலைந்த பிரதமர்: ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்காகத் தான் வருந்துவதாகத் தெரிவித்தார். ஆனால் அவரின் வருத்தம் மட்டும் கலவரத்தைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை.
மேலும், மாதக்கணக்கில் நடந்த இந்த கலவரம் வன்முறை நிறைந்தது மட்டுமல்லாது அரசியல் நிறைந்ததாகவும் மாறியது. மேலும், இந்த மணிப்பூர் கலவரத்தின் சுவடுகள் 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மணிப்பூரில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வரை எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அதிகரித்து வரும் புதியவகை கரோனா தொற்று.. உலக சுகாதார அமைப்பு எச்சரிப்பது என்ன?