மணிப்பூர்: சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் பிரேன் சிங், 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் போட்டியாளரான பங்கேஜம் சரத்சந்திர சிங்கை தோற்கடித்தார். தொடர்ந்து அவர் ஐந்தாவது முறையாக தனது ஹீங்காங் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.
கால்பந்து வீரரும், முன்னாள் பத்திரிகையாளருமான பிரேன் சிங், ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் 2002 இல் முதன்முதலில் நுழைந்தார். அதே ஆண்டில், அவர் காங்கிரசுக்கு தாவினார். அங்கு அவருக்கு அப்போதைய முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் தலைமையிலான அமைச்சரவையில் விஜிலென்ஸ் அமைச்சராக பதவி வழங்கப்பட்டது.
அரசியலில் சேருவதற்கு முன்பு, பிரேன் சிங் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார். அவர் விளையாட்டு ஒதுக்கீட்டில் எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) சேர்ந்தார். பின்னர் தனது வேலையை விட்ட பிரேன் சிங், 1992 இல் நஹரோல்கி தௌடாங் என்ற வடமொழிப் பத்திரிகையை வெற்றிகரமாக தொடங்கி, அதன் ஆசிரியராக 2001 வரை தொடர்ந்து பணியாற்றினார்.
2002 முதல் 2017 ஆம் ஆண்டு வரை முதலமைச்சர் ஒக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது, பிரேன் சிங்குக்கு நீர்ப்பாசனம், விளையாட்டு துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சரவைப் பதவிகள் வழங்கப்பட்டன. ஒக்ராமின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவராக பிரேன் சிங் அறியப்பட்டார்.
இருப்பினும், பிரேன் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில கருத்து வேறுபாடுகளால் விலக முடிவு செய்து, 2016-ல் பாஜகவில் சேர்ந்தார்.
2017 இல், பிரேன் சிங் ஹெய்ங்காங் தொகுதியில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், என்பிபி, என்பிஎப், எல்ஜேபி மற்றும் டிஎம்சி உடன் கூட்டணி அமைத்து பாஜகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தார். பிரேன் சிங் பாஜக சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மார்ச் 15, 2017 அன்று மணிப்பூர் முதலமைச்சராகப் பதவியேற்றார். 2020 இல் பாஜகவில் அவருக்கு எதிராக பிரச்சனை வந்தபோதும், பிரேன் சிங் தனது அரசியல் புத்திசாலித்தனத்தால் எளிதாக சந்தித்தார்.
இதையும் படிங்க: உள்கட்சி பிரச்னையால் தத்தளித்த காங்கிரஸ்: பஞ்சாப் முதலமைச்சர் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி