இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள், குக்கி இன மக்கள் இடையே பழங்குடியினர் அந்தஸ்து விவகாரத்தில், மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க குக்கி இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மே மாதம் 3-ஆம் தேதி, மணிப்பூரில் பழங்குடி இன மக்கள் நடத்திய ஊர்வலத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 150 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையில், இரண்டு பெண்கள் ஆடைகள் இன்றி நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு நேரத்தில் மீண்டும் வன்முறை ஏற்பட்ட சம்பவத்தில் முதியவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குவாக்டா லாம்காய் கிராமப் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுதம் ஏந்திய படையினருக்கும் நிகழ்ந்த சண்டையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 67 வயதான யும்னம் பிஷக் மெய்தி, அவரது மகன் யும்னம் பிரேம்குமார் மெய்தி மற்றும் யும்னம் ஜிதேன் மெய்தி என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயம் அடைந்து உள்ள நிலையில், கிராம மக்கள் சிலரை, ஆயுதம் ஏந்திய மக்கள், கடத்திச் சென்று உள்ளதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவாக்டா பகுதியில் குவிந்த வன்முறைக்கும்பல் சுராசந்த்பூர் பகுதியை நோக்கி முன்னேறிய நிலையில், அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும், ஆயுதம் ஏந்திய அந்த கும்பலுக்கும் இடையே, பவுகாக்சாவோ பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக, காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கவுடுருக் மலைப்பகுதிகளில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இருந்த பதுங்கு குழிகளை, கூட்டு பாதுகாப்புப் படையினர் அழித்து உள்ளதாக, மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்து உள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் 27 சட்டப்பேரவை தொகுதிகளில், ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்து இருந்த 24 மணிநேர பொது வேலிநிறுத்தத்தின் காரணமாக, தலைநகர் இம்பால் பகுதியில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Bombay High Court: விசாரணையின் போதே திடீரென பதவி விலகிய நீதிபதி.. மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?