ரூர்க்கி: உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் லிவ்-இன் பார்ட்னரின் 12 வயது மகனை கொலை செய்து கால்வாயில் வீசிய இளைஞர் நேற்று (டிசம்பர் 18) கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ரூர்க்கி போலீசார் கூறுகையில், காஜியாபாத்தில் உள்ள அல்வி நகரை சேர்ந்தவர் முஸ்கான் (40). இவர் கணவரை பிரிந்த நிலையில் மகன் அயன் (12) உடன் வசித்துவந்தார். இதனிடையே அவருக்கும் காசிப் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் லிவ்-இன் உறவாக மாறியது.
இதையடுத்து முஸ்கான் மகன் அயன் (12) மற்றும் காசிப் ஆகியோருடன் காளியர் கிராமத்துக்கு குடிபெயர்ந்தார். அந்த கிராம மக்களிடம் காசிப்பை முதல் மகன் என்று சொல்லிவைத்துள்ளார். இப்படி 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு (டிசம்பர் 18) காசிப், முஸ்கான் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், காசிப் அயனை கூட்டிக்கொண்டு அருகில் உள்ள கோயிலில் தங்குவதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
இதையடுத்து மறுநாள் காலை காசிப் மட்டும் வீடு திரும்பியுள்ளார். அயன் எங்கே என்று கேட்டபோது ஆரம்பத்தில் உண்மையை சொல்லாமல், பின்னர் நண்பருடன் சேர்ந்து அயனை கொலை செய்து கங்கையாற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முஸ்கான் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் காசிப்பை கைது செய்தோம். அயனின் உடலை தேடிவருகிறோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கடத்தல்: 4 மாநிலங்களில் இருந்து 6 அஸ்ஸாம் சிறுமிகள் மீட்பு