சர்குஜா(சத்தீஸ்கர்) : சத்தீஸ்கர் மாநிலம் அம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவருடைய 7வயது மகள் சுரேகாவிற்கு கடந்த சில நாள்களாக கடும் காய்ச்சல் இருந்து வந்த நிலையில், லகான்பூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று (மார்ச் 25) காலை சுரேகாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து 7.30 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, சிறுமியின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து 9.20 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதற்குள் இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனையை விட்டு ஈஸ்வர் தாஸ் வெளியேறியதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஈஸ்வர் தாஸ், இறந்த தன் மகளின் உடலை 10 கிமீ தூரம் தோளில் சுமந்து சென்று அம்தாலாவில் உள்ள தன் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைராக பரவியது.
இதையடுத்து, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ கூறுகையில், "நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். மிகவும் கவலைக்குரியதாக இருந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அம்மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு கூறியுள்ளேன்.
விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மருத்துவமனை ஊழியர்கள் சிறுமியின் குடும்பத்தாரிடம் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்குமாறு கூறியிருக்க வேண்டும். இனிமேல் இது போன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கணவன் செய்யும் வேலையோ தரகு மோசடி.. மனைவியால் தவிர்க்கப்பட்டதோ செமத்தியான அடி!