சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க கோரியும் அவருக்கு என்ன ஆயிற்று என்பது குறித்து பொதுவெளியில் வெளியிட கோரியும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், "வங்கத்தின் தலைசிறந்த மகன்களில் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவரின் 125ஆவது பிறந்த நாள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் சின்னமாக விளங்கும் அவர் ஒரு தேசியத் தலைவர் ஆவார்.
பல்வேறு தலைமுறையினருக்கு அவர் உத்வேகம் அளிக்கிறார். அவரின் தலைமையின் கீழ்தான் இந்திய ராணுவத்தினர் தேசத்திற்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவரின் பிறந்த நாள் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க மத்திய அரசிடம் பல முறை கோரிக்கைவிடுத்துள்ளோம். ஆனால் இதுநாள் வரை அந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
நேதாஜி போன்ற சிறந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.